கோவிலில் கட்டுமான பணி மேல் தலத்திலிருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமான பணியின் போது மேல் தளத்திலிருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.;
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமான பணியின் போது மேல் தளத்திலிருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.மேலும் ஆடி மாதத்தில் நடைபெறும் 14 வாரம் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் கோவிலுக்கு வந்து செல்வதால் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் 159 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி, அன்னதான கூடம், மொட்டை அடிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதற்கான பணியில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் கட்டிடம் ஒன்றின் மேல்தளத்தில் கட்டுமானபணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திபாகர் பாலா (31) என்ற தொழிலாளி கால் இடறி கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணியின் போது கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.