செந்துறை அருகே பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியர் மீது வழக்கு
செந்துறை அருகே பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியர் மீது வழக்கு;
அரியலூர், ஜூன் 13- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர். செந்துறை அடுத்த மணப்பத்தூர் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் செல்வராஜ்(43). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், அப்பள்ளியில் பயிலும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள், அப்பள்ளியை வெள்ளிக்கிழமை பூட்டினர். மேலும், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து சென்ற தளவாய் காவல் துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள ஆசிரியர் செல்வராஜை தேடி வருகின்றனர்.