சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தமிழக அரசின் சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் அமைக்கப்பட்ட பிறகு சுற்றுலா பணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பு வெள்ளி விழா நினைவு வளைவு அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தற்போது ஐயன் திருவள்ளுவர் சாலை முழுவதையும் அடைத்து மாற்றுவழி கூட ஏற்படுத்திக் கொடுக்காமல் அலங்கார வளைவு பணி நடைபெறுகிறது. இதனால் அடுத்த நான்கு மாதங்களுக்கு மாற்றுத்திறனாளிகள், வயதான சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே ஆம்புலன்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் சென்று வர பாதை அமைத்துக் கொடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.