தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து தவறி விழுந்து காவலர் பலி

வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து தவறி விழுந்து காவலர் பலி. விபத்தில் சிக்கியவரை மீட்க சென்றபோது பரிதாபம்;

Update: 2025-06-19 02:49 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வல்லநாடு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் இன்று இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் அவர் வந்துகொண்டிருந்த போது பாலத்தில் அருகே சாலையில் வைத்திருந்த பேரிகார்டில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக வந்தவர்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த நபரை போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது முறப்பநாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் தென்காசி மாவட்டம் கீழகழுநீர்குளம் பகுதியை சேர்ந்த காவலர் சங்கர் குமார் (31) பாலத்தின் தடுப்பு சுவர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து சுமார் 50 அடி ஆழத்தில் உள்ள ஆற்றில் சங்கர் குமார் தவறி விழுந்தார். அப்போது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் மற்றும் பொதுமக்கள் வேகமாக ஆற்றுக்குள் இறங்கி சென்றனர். ஆற்றில் தண்ணீர் இல்லாத தரை பகுதியில் விழுந்த சங்கர் குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்தார். உடனடியாக போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சங்கர் குமாரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரை மீட்பதற்காக வந்த காவலர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் பேரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News