கீழடி உள்ளிட்ட அகழாய்வு இடங்களுக்கு கல்விச் சுற்றுலா - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.;

Update: 2025-06-22 14:30 GMT
பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக ‘கலைச் சிற்பி’ எனும் பயிலரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், இயக்குநர்கள் ச.கண்ணப்பன், பூ.ஆ. நரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.70 லட்சம் ஒதுக்கப் பட்டு மாணவர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. ‘கலைச் சிற்பி’ திட்டம் மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும். கிராமப் புற மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு களப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வசதிகள் குறித்து அறிமுகப்படுத்துகிறோம். இதன்மூலம் கல்லூரியில் சேர வேண்டும் என்ற மனப்பான்மை மாணவர்களிடம் உருவாக்கப்படுகிறது. இது தவிர ஆண்டுதோறும் 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்கள் குறித்து கற்பிக்கின்றனர். இனிமேல் பள்ளி மாணவர்களையும் கீழடி மற்றும் பிற அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வோம். இத்திட்டம் மாணவர்களுக்கு வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.

Similar News