சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க இந்து அமைப்பினர் கோரிக்கை
சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க இந்து அமைப்பினர் கோரிக்கை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோவில் 1-ம் தெருவை சேர்ந்தவர் அருணகிரி (55). மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர். இவர் அருணகிரி சங்கரன்கோவில் என்ற முகநூல் சமூக வலைதள முகவரியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்த வகையிலும், இந்து சமுதாய பண்பாட்டினை அவமதிக்கும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக இந்து சமுதாய மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகிறார். அவர் மீது பலமுறை காவல்துறையில் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி கோட்டச் செயலாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், நகரத் தலைவர் பாடாலிங்கம் (எ) ராஜா, செயலாளர்கள் மாரிமுத்து, திருமலைக்குமார், இந்து ஆலய பாதுகாப்பு கமிட்டி கோட்டத் தலைவர் ராஜா, துணைத் தலைவர் செல்வ ராஜ், பொருளாளர் கிருஷ்ணசாமி, செங்குந்தர் அபிவிருத்தி சங்கச் செயலாளர் மாரிமுத்து, ஐயப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகி கனி, பாஜக முன்னாள் நிர்வாகிகள் சுப்பிரமணியன், அந்தோணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் சங்கரன்கோவில் நகர காவல் நிலையம் முன்பு திரண்டனர். மேலும் இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல் ஆய்வாளர் சேகரிடம் மனு கொடுத்தனர். மேலும் இந்து சமய உணர்வுகளை புண்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் அறப்போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர், அனைத்து இந்து அமைப்புகள் அனைவரும் கலந்து சென்றனர்.