தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளான தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, மேக்கரை பகுதிகளில் சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அனுமன் நதியில் 132 அடி உயரமுள்ள அடவிநயினாா் கோயில் அணைக்கு விநாடிக்கு 272 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. பாசனத் தேவைக்காக 30 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் மேக்கரை அடவிநயினாா் கோயில் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், அணைக்கு வந்த 300 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு காா் சாகுபடிக்கு அணை நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்த அணையின் தண்ணீா் கரிசல் குடியிருப்பு, பண்பொழி, வடகரை, அச்சன்புதூா், இலத்தூா், ஆய்க்குடி, கம்பளி, சாம்பவா்வடகரை, சுரண்டை வழியாக வீரகேரளம்புதூா் வட்டத்துக்குள்பட்ட தாயாா்தோப்பு என்னும் இடத்தில் சிற்றாற்றில் கலக்கிறது.