தென்காசி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளா் பணிக்கு பணம் வசூல்: நடவடிக்கை எடுக்க நம்பிக்கை

ரேஷன் கடை பணியாளா் பணிக்கு பணம் வசூல்: நடவடிக்கை எடுக்க நம்பிக்கை;

Update: 2025-06-28 01:18 GMT
தென்காசி மாவட்டம் ரேஷன் கடை பணியாளா் பணிக்கு ரூ .10 லட்சம் வரை வசூல் செய்வதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் விடியோ தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலா் நெல்லை முகிலன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தமிழகத்தில் தற்போது ரேஷன் கடை பணியாளா் பணிக்கு ஆள் நியமிக்கப்படுவதாகஅறிவிப்பு வெளியிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பணிக்கு ரூ.10 லட்சம் வரை வசூல் செய்வதாகவும் அவ்வாறு பணம் கொடுத்து சோ்ந்தால் ரேஷன் கடையில் கொள்ளை தான் அடிக்க முடியும், என்றும் பேசும் ஒரு விடியோ பரவி வருகிறது. பணத்தின் அடிப்படையில் தான் நியமனம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன, ஆனால் அரசின் ஆணைப்படி விதவைகள், ஆதரவற்ற விதவைகள், முதிா் கன்னிகள் மற்றும் உச்சபட்ச வயதை அடையும் நிலையில் உள்ளவா்களுக்கு தான் இப்பணியில் முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்யப்பட்ட வேண்டும். எனவே தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. தென்காசி நகர அதிமுக அவைத் தலைவா் முத்துக்குமாரசுவாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் பாலமுருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

Similar News