குமரி மாவட்டம் பாலப்பள்ளம் படுவூர் பகுதியை சேர்ந்தவர் டார்வின் (46). தொழிலாளி. இவருடைய மனைவி பபிதா நித்திய செல்வி (39). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று காலை முதலே வீடு பூட்டி கிடந்துள்ளது. அந்தி சாய்ந்து இரவான நிலையிலும் வீட்டில் விளக்குகள் எரியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு பபிதா நித்திய செல்வி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். கணவர் டார்வின் பதட்டத்துடன் இருந்துள்ளார். இது பற்றி கருங்கல் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து டார்வினை பிடித்து போலீசர் விசாரித்ததில் மனைவியை கொன்று விட்டு மாலை வரை பிணத்துடன் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. கணவன் மனைவியுடைய திடீரென தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த டார்வின் பபிதா நித்திய செல்வி கழுத்தை நெரித்தும், துணியால் கழுத்தை இறுக்கி கொன்றதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து டார்வினை கைது செய்தனர்.