நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரை ஏஜேஎம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- கோணம் சந்திப்பு பகுதியில் இருந்து தொல்லவிளை செல்லும் ஆற்றங்கரையோர சாலையில் இருந்து செல்லும் கிளைச்சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் கரையோரம் 4 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை எப்பொழுதும் வண்டிகளும், கனரக வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையாகும். குறிப்பாக அருகில் ஸ்போர்ட்ஸ் அகாடமி இருப்பதால் சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை ஆகும். இந்த சந்திப்பு பகுதியில் சாலையில் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளின் பார்வையில் தெரியாத காரணத்தினால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது இந்த பள்ளத்தை சுற்றி பெரும்கற்கள் வைத்து விபத்து பகுதி என்று அடையாளப்படுத்தி உள்ளனர். ஆகவே உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இந்த ஆபத்தான சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.