தனியார் பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை: ஆசிரியர் கைது

ஆசிரியர் கைது;

Update: 2025-07-01 16:06 GMT
தஞ்சாவூரில் தனியார் பள்ளி மாணவர் வீட்டில் திங்கள்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை ரோசலின் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களது ஒரே மகன் ஸ்ரீராம் (16) புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வெகு நேரமாகியும் ஸ்ரீராம் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீராம் தூக்கிட்ட நிலையில் தொங்கினார். இதையடுத்து, ஸ்ரீராமை பெற்றோர் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர்.  தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் ஸ்ரீராம் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஸ்ரீராம் அறையை பெற்றோர், உறவினர்கள் சோதித்து பார்த்தபோது, அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், இந்த நிலைமைக்கு காரணம் வகுப்பு ஆசிரியர்தான். நானும், ஒரு பெண்ணும் நட்பாகப் பேசியதை, அவர் தவறாக புரிந்து கொண்டு, என்னை மற்றவர்கள் முன்னால் தரக்குறைவாக திட்டினார். இதனால், நான் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். பின்னர் மறுபடியும் என்னையும், அப்பெண்ணையும் அழைத்து திட்டினார். என் முடிவுக்கு அந்த ஆசிரியர் தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையறிந்த ஸ்ரீராம் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் பள்ளியில் திரண்டு, தொடர்புடைய ஆசிரியர், பள்ளி முதல்வர், தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா.சோமசுந்தரம், ஆய்வாளர் வி. சந்திரா உள்பட ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொடர்புடைய ஆசிரியர், பள்ளி முதல்வர், தாளாளர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் ஐ. சிம்காஸ் ராஜ் (26) கைது செய்யப்பட்டார். என்றாலும், பள்ளி முதல்வர், தாளாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீராம் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News