நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் : திருவையாறு அருகே சாலை மறியல்

சாலை மறியல்;

Update: 2025-07-01 16:08 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நியாய விலைக் கடையில் முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி இரண்டாம் எண் கடையில் முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், மாதம் முழுவதும் அலைக்கழிப்பு செய்யப்படுவதாகவும், நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில் ஊழியர்கள் உணவு அருந்தச் செல்வதாகவும் கூறி அதிருப்தியடைந்த பொதுமக்கள் கண்டியூர் } திருக்காட்டுப்பள்ளி சாலையில் குறுக்கே இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நடுக்காவேரி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அலுவலர்களை அழைத்து பேசி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News