பெற்றோரை இழந்து ஆதரவற்ற மாணவருக்கு எம்எல்ஏ உதவி

மாணவருக்கு உதவி;

Update: 2025-07-02 14:17 GMT
பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்து வரும் மாணவருக்கு, பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் நிதியுதவி வழங்கியதுடன், அவருக்கு வீடு கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (63), சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்து வந்த இவர் கடந்த 35 தினங்களுக்கு முன்பு காலமானார். இவரது மனைவி சித்ரா ஊனமுற்றவர். இவரும் 18 மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.  இவர்களது ஒரே மகன் கைலாஷ் குமார் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் பெற்றோரை இழந்த கைலாஷ் குமார் உறவினர்கள் பராமரிப்பில் இருந்து வருகிறார். இவர் வசித்து வந்த குடிசை வீடு முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது.  இந்நிலையில், மாணவரின் ஏழ்மை மற்றும் ஆதரவற்ற நிலை அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், புதன்கிழமையன்று ஆதனூர் சென்று மாணவரை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் நிதி உதவி அளித்தார்.  மேலும், "மாணவர் தான் பாலிடெக்னிக் படிக்க விரும்புவதாகவும், எனவே தனது படிப்பிற்கும், தனக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்க வீடு கட்டித் தருமாறும்" கோரிக்கை விடுத்தார். இதையேற்ற சட்டமன்ற உறுப்பினர், "மாணவரின் கல்விச்செலவை ஏற்பதாகவும், விரைவில் அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாகவும்" உறுதியளித்தார்.  மேலும்,"கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும் கருவியாகும். எனவே நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். படித்து முடித்ததும் வேலை வாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்து தருகிறேன்" என்று உறுதி அளித்தார்.  இதையடுத்து மாணவர் கண்ணீர் மல்க சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.

Similar News