பரமத்திவேலூர் அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.
பரமத்திவேலூர் அருகே தேங்காய் வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.;
பரமத்திவேலூர்,ஜூலை.3: பரமத்திவேலூர் அருகே குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(45). இவரது மகன் மோகன் பாபு(20). இவர் தேங்காய் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதேபோல் குப்பிச்சிபாளையம் சனபக்காடு பகுதியை சேர்ந்தவர் சீரங்கன்(50). இவரது மகன் சிவா (24). இவர் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். 'இந்நிலையில் பொய்யேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றபோது அங்கு போதையில் இருந்த சிவா என்பவர் சங்கரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அங்கு இருந்த சங்கரின் மகன் மோகன் பாபு எதற்காக எனது அப்பாவை திட்டுகிறாய் என்று சிவாவிடம் கேட்டதற்கு அப்படித்தான் திட்டுவேன் என்று கூறி மோகன் பாபுவை கட்டையால் தலையில் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல் மோகன்பாபுவை பார்த்து உன்னை பீர் பாட்டிலால் குத்தி கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் மோகன் பாபு சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதை பார்த்த சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக மோகன்பாபுவை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மோகன் பாபு பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர், மோகன் பாபுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிவா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.