அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன்கள்

விடுமுறை என்பதால் விலை பற்றிய கவலை மறந்த மீன் பிரியர்கள்;

Update: 2025-07-06 08:39 GMT
நாகை மாவட்டத்திற்குட்பட்ட நாகூர் பட்டினச்சேரியில் தொடங்கி அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், வெள்ளப்பள்ளம், ஆற்காட்டுத்துறை, கோடியக்கரை உட்பட 27 மீனவ கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடித்து வருகின்றனர். குறிப்பாக, தடைக்காலத்திற்கு பிறகு கடந்த 1 மாதமாக மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நள்ளிரவு முதல் அதிகாலை வரை விசைப்படகுகள் கரை திரும்பின. நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி  விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதால்  மீன்கள் வாங்க வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு கிலோ வஞ்சரம் ரூ.1000, பாறை ரூ.350 முதல் 400 வரையிலும், கடல் விறா ரூ.400 முதல் ரூ.420 வரையிலும், சூரை மீன் ரூ.80, சீலா ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், வவ்வால் ரூ.1200 முதல் ரூ.1300 வரையிலும், இறால் ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், புள்ளி நண்டு ரூ.500 முதல் ரூ.550 வரையிலும், சாதாரண நண்டு ரூ.250 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. மீன் விலை சற்று அதிகரித்து காணப்பட்டாலும், விடுமுறை என்பதால் விலையை பொருட்படுத்தாமல் வியாபாரிகளும், மீன் பிரியர்களும் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.

Similar News