குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி பா.ஜ., கவுன்சிலர் சுபாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுதும் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க தி.மு.க.,வினரால் நடத்தப்படும் இந்த கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோகின்றன.கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகளை சோதனை செய்வதில் போக்குவரத்து போலீசார் மெத்தன போக்கினை கையாண்டு வருகின்றனர். கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அதையும் தாண்டி ஏராளமான வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி செல்கின்றனர். பல வாகனங்களில் பின்பக்கம் பதிவு எண்,பிரேக்லைட் இல்லாத நிலை உள்ளது.கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகளால் அடிக்கடி குமரி மாவட்டத்தில் உயிர் பலி நடக்கிறது. மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர் லாரி ஓட்டுனர்கள்.இதற்கு போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன? இதையெல்லாம், தி.மு.க., அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுதும் கனிமவள கடத்தலில் ஈடுபடும், பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது சொர்ப்ப எண்ணிக்கை மட்டுமே. கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது, தி.மு.க., அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.