குமரகுருபர சுவாமிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் – அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்று ஆசிஉரை வழங்கிய கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் முருக பக்தர்கள் பேரவை மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-09 08:18 GMT
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்று ஆசிஉரை வழங்கிய கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் முருக பக்தர்கள் பேரவை மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முருக பக்தர்கள் பேரவை மாநில பொதுச் செயலாளர் முருக ராமமூர்த்தி தலைமையிலானோர், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், பல்வேறு மடாதிபதிகள், ஸ்ரீ கந்தன் காவடி குழுவினர் மற்றும் கௌமார மடாலய தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்தது முருக பக்தர்களின் நெஞ்சில் தீ வைத்தது போல உள்ளது. ஆளுங்கட்சி ஏற்பாடு செய்த பழனியில் நடைபெற்ற முருகர் மாநாட்டிலும் அந்த ஆதீனம் கலந்து கொண்டு அருளாசி வழங்கியிருக்கிறார். எங்கு முருக பக்தர்கள் திரண்டாலும், அவர் சென்று ஆசீர்வாதம் வழங்குவது வழக்கம். இந்த நிலையில், அவரை அரசியலுக்குள்ளாக்க முயற்சி செய்யக் கூடாது என்றார். மேலும், வழக்கு தொடர்ந்துள்ள வாஞ்சிநாதன் என்ற வழக்கறிஞர் மத நல்லிணக்கத்தை சொல்லிக்கொண்டு நக்சல் சிந்தனையுடன் செயல்படுபவர் என்றும், அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்தது ஒரு காரியம் என்றால், ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்தது ஒரு மிரட்டல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். முதல்வர் இதற்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி, குமரகுருபர சுவாமிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இதை புறக்கணிக்கப்படும் பட்சத்தில் தமிழக முழுவதும் அனைத்து கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பெரிய ஆன்மீகப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.

Similar News