அடுக்கு மாடி குடியிருப்பில் வசதியின்றி அவதி: நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் புகார்!
கோவை சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார்.;
கோவை சரவணம்பட்டி - துடியலூர் சாலையில் அமைந்துள்ள கே.ஜி டவுன் சிட்டி & டெவலப்பர்ஸ் டெக்னோபோல் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் செலுத்தி வீடுகளை வாங்கிய 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கழிவுநீர் வெளியேறும் வசதியே இல்லாத நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர். சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீர் வெளியேற்றப்படும் என வாக்குறுதி அளித்த நிறுவனத்தினர், எந்தவொரு வசதியும் செய்யாமல் மோசடி செய்துள்ளதாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புகார்கள் அளித்தும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனும் புகாரும் உள்ளது. சுகாதார சீர்கேடால் மக்கள் நோய்கள் பாதித்து வருவதாகவும், சொந்த வீட்டுக்கான கனவுகள் நிஜமாகாது விட்டதாகவும் கூறும் அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.