பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2025-07-09 18:21 GMT
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மக்களின் மீது அனைத்து வரிகளையும் சுமத்தி, ஆண்டொன்றுக்கு ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் வருமானத்தை ஈட்டும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயிலும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் 2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.12,500 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களது பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்து சமூக நலக் கூடங்களில் தங்க வைத்திருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Similar News