ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை, பேச்சுப்போட்டி;
தமிழ்நாடு நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தில் இருந்து அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்துக் கொண்டனர். முதலில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், வலையம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி ருபிக்ஷா முதலிடமும், துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி ரம்யா இரண்டாமிடமும், நம்பியூர் குமுதா பதின்ம மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி மஹன்யா மூன்றாமிடமும் பிடித்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில், வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஸ்ரீமித்ரா முதலிடமும், அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ இரண்டாமிடமும், ஈரோடு ஆர்.டி.பன்னாட்டுப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி தியா மூன்றாமிடமும் பிடித்தனர். இப்போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரமும், மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.