தாராபுரம் அருகே சாக்லேட் மூட்டைகள் வீச்சு போதை பொருளா என பரபரப்பு
தாராபுரம் சாலையில் சாக்லேட் மூட்டைகள் வீச்சு – போலி சாக்லேட்டா? போதைப் பொருளா? பரபரப்பு விசாரணை.;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் தீவுத்திடல் அருகே உள்ள உடுமலை சாலையில் மர்மநபர் ஒருவரால் சாக்லேட் மூட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் ஏற்கனவே குப்பைகளை கொட்டி வந்த நிலையில், நேற்று இரவு மர்மநபர் ஒருவர் மூட்டைகள் முழுவதும் சாக்லேட்டுகளை சாலையின் நடுவே கொட்டி சென்றார். இதனை தவறாக புரிந்த பொதுமக்கள், "சாக்லேட் ரோடு முழுக்க கிடக்குதே" என சிலர் எடுத்து பார்த்ததிலேயே பரிதாபம் வெளிப்பட்டது. அந்த சாக்லேட்டுகள், போலியான பிராண்டு பெயர்களுடன் தயாரிக்கப்பட்டவை என்றும் சில சாக்லேட்டுகள் காலாவதியான நிலையில் உள்ளன என்றும் தெரியவந்தது. சாலையில் சிதறிக்கிடந்த சாக்லேட்டுகளை தெருநாய்கள் சாப்பிட்டதையும், அருகிலுள்ள பள்ளிக்குழந்தைகள் அவற்றை எடுத்து சாப்பிடக் கூடும் என்பதாலான அச்சத்தையும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, ஒரு தன்னார்வலர் சாலையில் சிதறியிருந்த சாக்லேட்டுகளை ஒரு மூட்டையில் சேர்த்து ஓரமாக வைத்தார். இந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.இவை போலி சாக்லேட்டுகளா? போதைப் பொருளாக தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளா? இந்த செயலை செய்த நபர் யார்? இந்நிலையில், தாராபுரம் நகராட்சி நிர்வாகம், காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, சாக்லேட் மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்று பொது இடங்களில் சாக்லேட்டுகள் அல்லது உணவுப் பொருட்கள் வீசும் சம்பவங்களை கவனித்து, சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். தாராபுரம் உடுமலை சாலையில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகர சம்பவம் தற்போது பரபரப்பான விசாரணைக்கு வழிவகுத்துள்ளது.