நச்சுக்கழிவை கொட்டிய ஆலையை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
நீர்நிலைகளில் அபாய நச்சுக்கழிவை கொட்டியஇரும்பு குழாய் தயாரிப்பு ஆலையை இயக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!! மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தல்!!;
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மாசு தடுப்பு தொடர்பான நேரடி கலந்தாய்வு அமர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.பின்னர் அந்தக் கேள்விகளை மனுவில் குறிப்பிட்டு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 9ம் தேதி மக்கள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நடவடிக்கை விபரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் அதிகபட்சம் 15 தினங்களுக்குள் பதிலுரைகளை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வழங்க வேண்டும்.பெருந்துறை சிப்காட்டில் இரும்பு குழாய் தயாரிக்கும் தனியார் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து அபாயகரமான ரசாயனக் கழிவுகள் சட்டவிரோதமாக டேங்கர் லாரியில் எடுத்துச் சென்று நசியனூர் அருகே ஆட்டையாம்பாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீரோடையில் கலந்து விட்டு நீர்நிலைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதற்காக கடந்த 24.03.2025 அன்று மூடுதல் உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டிலும் தொடர் மழைக்காலத்தில் அபாயகரமான ரசாயனக் கழிவுகளை சட்டவிரோதமாக மழைநீருடன் கலந்து வெளியேற்றி செங்குளம் பகுதியில் உள்ள குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மிகக் கடுமையான அளவுக்கு மாசுபடுத்தியதற்காக மூடுதல் உத்தரவு வழங்கப்பட்டது. எனவே, தொடர்ந்து திட்டமிட்டு, விதிகளுக்கு புறம்பாக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் அந்த இரும்பு குழாய் தயாரிக்கும் தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதி வழங்கக் கூடாது என்ற பொதுமக்களின் கோரிக்கையை நிராகரித்து, கடந்த மாதம் 18ம் தேதியிலிருந்து அந்த நிறுவனத்துக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கவும், ஆலை மீண்டும் செயல்படவும் அனுமதி வழங்கி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்த இரும்பு குழாய் ஆலை திறப்பதற்கான உத்தரவைதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருப்பில் உள்ள தோல் திடக்கழிவுகள், கலப்பு உப்புகள் மற்றும் அபாயகரமான நச்சு கழிவுகளின் அளவு விபரங்களை தொழிற்சாலைகள் வாரியாக தெரிவிக்க வேண்டும்.பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 40 திறந்த வெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் மாதந்தோறும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நீர் மாதிரிகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுவதில்லை. நீர் மாதிரிகள் சேகரிக்கப்படும் எண்ணிக்கையும் தன்னிச்சையாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 40 இடங்களிலும் மாதந்தோறும் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். பெருந்துறை சிப்காட் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரோட்டத்தை அறியவும், நிலத்தடி நீர் மாசடைந்த பகுதிகளை கண்டறிந்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் - தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (என்ஜிஆர்ஐ) அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக சுமார் ரூ.1 கோடியும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமும் மூன்று பருவ நிலைகளில் ஆய்வு செய்து இடைக்கால அறிக்கை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நியமிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும், ஆய்வு முடிந்து சுமார் 3 ஆண்டுகளாகியும் இதுவரை ஆய்வறிக்கை சமர்பிக்கப்படாமல் உள்ளது. எனவே என்ஜிஆர்ஐ ஆய்வறிக்கையை உடனடியாகப் பெற்று வெளியிட வேண்டும். பெருந்துறை மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள மாவட்ட உதவிப் பொறியாளர் பணியிடத்தை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.