அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது.;

Update: 2025-07-11 10:14 GMT
அரியலூர், ஜூலை 10- அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் கணக்கெடுப்பு பணியினை ஆட்சியர் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்து கூறியது: அத்திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக் கூடியதாகும். இது எளிதாக அணுகுதல், சமவாய்ப்பு வழங்குதல், ஒருங்கிணைத்தல் ஆகிய மூன்று குறிக்கோள்களைக் கொண்டு கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் அவர்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே எளிதில் கிடைத்திட வழிவகை செய்வதாகும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர பகுதிகளை உள்ளடக்கிய 6 வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்களும், உட்கோட்ட அளவில் 2 ஒருங்கிணைந்த சேவை மையங்களும் ஏற்படுத்தப்பட்டு சேவை மையங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக 80 முன்களப்பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த முன்களப்பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கணக்கெடுத்தல், மறுவாழ்வு உதவிகள் கிடைத்திட பெறுவதற்கு மதிப்பீடு செய்தல், பிறத்துறை மூலமாக வழங்கப்படும் உதவிகளை பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மஞ்சுளா மற்றும் முன்களப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். :

Similar News