வளர்ப்பு நாயால் தகராறு: பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
வளர்ப்பு நாயால் தகராறு: பெண்ணை தாக்கிய இளைஞா் கைது;
கழுகுமலை அருகே வளர்ப்பு நாயால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி முனீஸ்வரி (52). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். கணவர் இறந்துவிட்ட நிலையில், முனீஸ்வரி தனது மகளுடன் கரடிகுளத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியில் கருப்பசாமி மகன் இன்பராஜ் (25) என்ற கட்டிட தொழிலாளியும் குடியிருந்துவருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இன்பராஜின் வளர்ப்பு நாய் அருகே உள்ள முனீஸ்வரி வீட்டிற்குள் சென்று அவரது துணிகள் மற்றும் இதர பொருட்களை கடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனீஸ்வரி, இன்பராஜ் வீட்டிற்கு சென்று நாயை கட்டி போட்டு வளர்க்குமாறு அவரை கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இன்பராஜ் தாக்கியதில் முனீஸ்வரி பலத்த காயம் அடைந்தாராம். அவரை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப் பதிவு செய்து இன்பராஜை கைது செய்தார்.