போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணி
சிவகிரி பகுதியில் 72 - வது நாளாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி;
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதிகள். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி 10 பவுன் நகைக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை காரணமாக தனியாக வசிக்கும் வயதான தம்பதிகள் அச்சம் அடைந்தனர். இதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி முதல் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியை தொடங்கி தீவிரப்படுத்தி வந்தனர். கொலையாளிகள் கைதிக்கு பின் படிப்படியாக இரவு ரோந்து போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் தற்போதும் இரவு ரோந்து தொடர்ந்து நடந்து வருகிறது.இது குறித்து போலீசார் கூறியதாவது:- பெருந்துறை சப்-டிவிஷன், ஆயுதப்படை போலீசாரை கொண்டு தினமும் 26 பேர் 13 மோட்டார் சைக்கிளில் துப்பாக்கிகளுடன் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு ரோந்து செல்கின்றனர். தொடர்ந்து 72 ஆவது நாளாக இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர் என்றனர்.