பரமத்தி வேலூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது.
பரமத்தி வேலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மொத்த வியாபாரி தலைமறைவு.;
பரமத்தி வேலூர்,ஜூலை.13: பரமத்தி வேலூர் நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை. எதிரில் உள்ள ஒரு கடையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் திருட்டுத்தனமாக மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் உப்பிலியர் தெருவை சேர்ந்த குலாப் ஜான் (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்திய போது தனக்கு அணிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரி சாமிநாதன் என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கொடுத்து விற்பனை செய்ய சொன்னதாக தெரிவித்தார். பின்னர் குலாப்ஜான் விற்பனைக்கு வைத்திருந்த ஏராளமான வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து குலாப் ஜானிற்கு வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு கொடுத்த சாமிநாதன் மற்றும் குலாப் ஜான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி தப்பியோடி தலைமறைவாக உள்ள சாமிநாதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.