தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி

ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு;

Update: 2025-07-16 08:18 GMT
ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை பாலிமெடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார். இவர் செல்போன் உதிரி பாகங்களை இரு சக்கர வாகனத்தின் மூலம் நகரின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் செல்போன் உதிரி பாகங்களுடன் ஈரோடு சம்பத் நகர் பெட்ரோல் பங்க் அருகே விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் செல்போன் கடை நடத்தும் கடைக்காரர் ஒருவர் செந்தில்குமாரின் செல்போன் உதிரிபாகங்களை உடைத்து சேதப்படுத்தி இந்த ஏரியாக்குள் இனி வியாபாரம் செய்ய வரக்கூடாது என மிரட்டி உள்ளார். இது குறித்து செந்தில்குமார் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று செந்தில்குமார் தனது மனைவி, 5 வயது மகன், கைக்குழந்தையுடன் ஈரோடு எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தார். மனைவி குழந்தைகள் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். செந்தில்குமார் தனது சாப்பாடு பையில் வைத்து இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஓடி சென்று செந்தில்குமார் இடம் இருந்த சீ மண்ணை கேனை பறித்தனர். இதனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. அவர் மீது தண்ணீரை ஊற்றி அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.இதை அடுத்து போலீசார் செந்தில்குமாரை ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Similar News