கவுன்சிலர் பதவிக்கு ஆர்வம்
மாநகராட்சி நியமன கவுன்சிலர் பதவிக்கு ஆர்வம் இதுவரை 8 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம்;
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் தேவை என்ற அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998,(தமிழ்நாடு சட்டம் 9.1999) தமிழ்நாடு சட்டம் 30.2025-ன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் சார்பில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் தலா ஒரு மன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளார்.அந்த அடிப்படையில் ஈரோடு மாநகராட்சி மன்ற உறுப்பினராக மாற்றுத்திறனாளி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இந்த உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். ஈரோடு மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் தகுதியான மாற்றுத்திறனாளிகள் வருகிற 17-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் மாநகராட்சி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் மாற்றுத்திறனாளிகள் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட உள்ளனர். அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளரிடம் கவுன்சிலர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் ஆர்வமாக வந்து விண்ணப்பங்கள் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ஈரோடு சம்பத் நகரை சேர்ந்த ரவீந்திரன், அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்பட 6 மாற்றுத்திறனாளிகள் நேற்று ஒரே நாளில் மாநகராட்சி ஆணையாளரிடம் விண்ணப்பங்களை வழங்கினர்.இதுவரை மொத்தம் 8 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் வழங்கி உள்ளனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாலை 3 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.