அழிஞ்சி குச்சிகள் தேக்கம் பாரம்பரிய விழாக்கள் மறையும் நிலை
பாரம்பரிய விழாக்கள் மறைந்து வரும் நிலையில், ஆடி. 1க்கு தேங்காய் சுடும் குச்சிகள் பெருமளவில் தேக்கமடைந்தன.;
பாரம்பரிய விழாக்கள் மறைந்து வரும் நிலையில், ஆடி. 1க்கு தேங்காய் சுடும் குச்சிகள் பெருமளவில் தேக்கமடைந்தன. ஆடி. 1, ஆடி.18, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், உள்ளூர் காளியம்மன், மாரியம்மன் பூ மிதிக்கும் திருவிழா, தேர்த்திருவிழா என்பது உள்ளிட்ட எண்ணற்ற விழாக்கள் நம் பாரம்பரிய விழாக்கள் ஆகும். இவைகள் பற்றி நம் வீட்டு பிள்ளைகளுக்கு பெரியவர்கள் கற்றுத்தர வேண்டும். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு, வேலைக்கு வெளியூர், வெளி நாடு என காலம் போய்க்கொண்டுள்ளது. இதில் பாரம்பரிய விழாக்கள் குறித்து பல பிள்ளைகளுக்கு தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. ஆடி. 1ல் தேங்காய் சுடுவது என்ற ஒரு வழக்கம் உள்ளது. இது முக்கண்ணன் அம்சமான தேங்காயில், ஒரு கண் துளையிட்டு நவதானியங்கள், வெல்லம் ஆகியவை போட்டு, அந்த துளையில், அழிஞ்சி குச்சி எனும் குச்சியால் அடைத்து, தீயில் தேங்காய் சுடுவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை எனும் பழமொழிக்கு ஏற்ப, முக்கண்ணன் ஆசி பெறுவதாக முன்னோர்கள் கூறுவார்கள். இதனை சுட்டு, தேங்காயை உடைத்து, வாழை இலையில் படையலிட்டு, தீபாராதனை காட்டி, வெல்லம் கலந்த நவதானியங்களை அனைவருக்கும் பகிர்ந்து வழங்குவார்கள். இது இயற்கையை வணங்குவதும், அனைவருக்கும் பகிர்ந்து வழங்கும் வழக்கமும் நம் பிள்ளைகளுக்கு பழக்கமாகும். இதனால்தான் ஆடி. 1ல் தேங்காய் சுடும் பழக்கம் ஏற்பட்டதாக கூறுவார்கள். இதனை செய்யும் அளவிற்கு, இப்போதைய பிள்ளைகளுக்கு நேரம் இல்லாமல் போகிறது. மொபைல் போன் பார்ப்பது, டி.வி. பார்ப்பது, இதற்கே நேரம் சரியாக உள்ளது. இது போன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களை நம் பிள்ளைகளுக்கு சொல்லி தர வேண்டும். இது போன்ற தேங்காய் சுடும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால். குமாரபாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்ட அழிஞ்சி குச்சிகள் பெருமளவில் தேக்கமடைந்து உள்ளன. இப்போ இருக்கும் பிள்ளைகளுக்கு தேங்காய் சுட எங்கே நேரம் உள்ளது? என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.