பழுதான பயணியர் மாளிகை கட்டிடம் புதுப்பிக்க கோரிக்கை

குமாரபாளையத்தில் பழுதான பயணியர் மாளிகை கட்டிடம் புதுப்பிக்க கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2025-07-19 13:59 GMT
குமாரபாளையத்தில் நகராட்சி அலுவலகம் அருகே பொதுப்பணித்துறை சார்பில் பயணியர் மாளிகை செயல்பட்டு வந்தது. முன்பெல்லாம் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த பயணியர் மாளிகையில் வந்துதான் தங்கி, தங்கள் பணிகளை கவனித்து செல்வார்கள். இது பழுதாகி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலானது. தற்போது இந்த வளாகத்தில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இதனருகில் பாழடைந்த நிலையில் பயணியர் மாளிகை உள்ளது. காவிரி ஆற்றங்கரை ஓரமாக உள்ளதால், விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக இந்த பயணியர் மாளிகை இருந்து வருகிறது. இதனை இடித்து விட்டு, புதிய பயணியர் மாளிகை கட்டினால், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இங்கு வந்து தங்கி, அரசு பணிகளை கவனிக்க எதுவாக இருக்கும். குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் நகரில் பயணியர் மாளிகை புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. ஆனால் தாலுக்கா தலைமையிடமான குமாரபாளையம் நகரில், தாலுக்கா அலுவலகம் செயல்படும் வளாகத்தில், உள்ள பயணியர் மாளிகை பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இது தாலுக்கா அலுவலக பொலிவை குறைக்கும் விதமாகவும், காண்போர் முகம் சுளிக்கும் விதமாகவும் உள்ளது. இதனை இன்னும் காலம் தாழ்த்தாமல், உடனே நிதி ஒதுக்கீடு பெற்று, புதிய பயணியர் மாளிகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News