சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு : மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு

வெளிநடப்பு;

Update: 2025-07-19 16:49 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில், சனிக்கிழமையன்று மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர்கள் பழ.அன்புமணி, ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ஏ.சந்திர பிரகாஷ், ராதிகா, ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் பழனிவேல் ராஜன், ஒன்றியச் செயலாளர் மதியழகன், ஒன்றியப் பொருளாளர் சிவகுமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணன் மற்றும் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வேறொரு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த சிலர், குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அல்லாத சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளக்கூடாது என பிரச்னை செய்தனர். மாற்றுத்திறனாளிகள் பிரச்னையை, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே புரிந்து கொண்டு, அது குறித்து பேச முடியும் என வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பி.எம். இளங்கோவன், பழ.அன்புமணி உள்ளிட்டோர், "அப்படியானால் குறை கேட்கும் அலுவலர்களும், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் தானே, அவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளின் குறை புரியும்" என அறிவுபூர்வமாக வாதம் எழுப்பினர். இதற்கான சரியான பதிலை வாக்குவாதம் செய்த, எதிர்த்தரப்பு மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சொல்ல முடியாமல் இருந்த நிலையில், அங்கிருந்த அலுவலர்கள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், மாற்றுத்திறனாளிகள் அல்லாத மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து விட்டு வெளியில் செல்லலாம்" என்று தெரிவித்தனர்.  இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர்,"எங்கள் குறைகளை சங்க நிர்வாகிகள் தெரிவிக்க அனுமதி மறுப்பதைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம்" என்று கூறி சங்க நிர்வாகிகளுடன் வெளி நடப்பு செய்தனர். இதனால மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Similar News