கோரை வாய்க்கால் அடைப்புகள் தூர்வாரி தரப்படும் என சமாதான பேச்சுவார்த்தையில் அலுவலர்கள் உறுதி
பேச்சுவார்த்தை;
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளி சரகம், தீட்சசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட, கோரை வாய்க்காலை அகலப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத, பூதலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முல்லைக்குடி கிளை சார்பில், திருக்காட்டுப்பள்ளி- பூதலூர் சாலையில், பிள்ளை வாய்க்கால் பாலம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பூதலூர் தாலுகா அலுவலகத்தில், வட்டாட்சியர் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர், காவல்துறையினர், திருக்காட்டுப்பள்ளி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அரசு தரப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், முல்லைக்குடி கிளை செயலாளர் தர்மராஜ், ஒன்றிய அமைப்பு குழு நிர்வாகிகள் முருகேசன், எம்.கே.சேகர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், "பூதலூர் வட்டம் முல்லைக்குடி பிள்ளை வாய்க்கால் கரையில் தற்போது வைக்கப்பட்டுள்ள கோரை வாய்க்கால் தூர்வாரப்பட்டது என்ற தகவல் பலகையில் ஏற்பட்ட தவறினை திருத்தம் செய்வது என்றும், கிளை வாய்க்கால்கள் தான் தூர்வாரப்பட்டது என்றும், வடிகால் வாய்க்காலான கோரை வாய்க்காலில் உள்ள அடைப்புகளை ஒரு வார காலத்திற்குள் சுத்தம் செய்து தருவது எனவும், கோரை வாய்க்கால் வடிகால் ஜேசிபி மூலம் தூர்வாரிட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும், 100 நாள் வேலையின் போது, வேலை கொடுத்தவருக்கே மறுபடியும் கொடுக்காமல், சுழற்சி முறையில் கிராம மக்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும்" என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.