தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்...  ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை... 

போராட்டம்;

Update: 2025-07-21 16:36 GMT
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 19ஆம் தேதி நடைபெற்ற,  மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அல்லாத சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளக் கூடாது என மாவட்ட அலுவலர்கள் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  'மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற அரசாணையை திரும்பப் பெற்று, சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜூலை 21 ஆம் தேதி திங்கள்கிழமை சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன் தலைமையில், கோரிக்கை நிறைவேறும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் தலைமையில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் திரண்டனர். இதையடுத்து அங்கு வந்து தஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அருள் பிரகாசம், அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து கோரிக்கையை கேட்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் போராட்டத்தில் ஈடுபட வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது, "உங்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அல்லாத சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என அரசாணை இருப்பதாகவும், வேறு சில மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர், அதனை சுட்டிக் காட்டுவதால், மாற்று திறனாளிகள் அல்லாத சங்க நிர்வாகிகளை அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்ததோடு மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுவையும் பெற்றார். இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.  முன்னதாக, சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.எம். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர் கூட்டத்தில் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்றுக் கொடுத்து வருகிறோம். இந்நிலையில், இக்குறை தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லாத சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், மாற்றுத்திறனாளிகள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறி ஐ.ஏ.எஸ். அலுவலர் அமுதா கடந்த ஆண்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தச் சுற்றறிக்கை மற்ற மாவட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர் கூட்டத்தில் எங்களது சங்கத்தை நிராகரிக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறி எங்களை வெளியேற்றிவிட்டனர். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்துவிட்டு, எங்களைத் தொடர்ந்து குறை தீர் கூட்டத்தில் அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.  இதில் சங்க நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர்கள் பழ.அன்புமணி, ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ராஜன், கோவி.ராதிகா, சி.ஏ.சந்திர பிரகாஷ், ஏ.சாமியப்பன், மாவட்ட பொருளாளர் மோகன், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் பழனிவேல் ராஜன், ஒன்றியச் செயலாளர் மதியழகன், பட்டுக்கோட்டை ஒன்றியப் பொறுப்பாளர் மணிகண்டன், மதுக்கூர் ஒன்றியப் பொருளாளர் பன்னீர்செல்வம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ராஜேஷ் கண்ணா, கும்பகோணம் ஒன்றிய தலைவர் (பொ) பாரூக், ஒன்றியச் செயலாளர் தாமோதரன், பாபநாசம் ஒன்றியப் பொறுப்பாளர் ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News