தென்னை மட்டை கம்பெனியில் வேலை பார்த்த பெண் மர்ம சாவு
செம்பட்டி அருகே, தனியார் தென்னை மட்டை கம்பெனியில் வேலை பார்த்த பெண் மர்ம சாவு - உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்;
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, அக்கரைப்பட்டியில் தனியார் தென்னை மட்டை கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் தென்னை மட்டைகளிலிருந்து தென்னை நார் எடுத்து வெளியிடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதில், ஆத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி முனீஸ்வரி (50) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவர் மயங்கி கீழே விழுந்ததாக அவரது மகன் அருண்பாண்டி (24) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் முனீஸ்வரியை கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த உறவினர்கள் மயங்கி விழுந்தவருக்கு எப்படி? கழுத்து மற்றும் உடலில் காயம் ஏற்பட்டிருக்கும்? எனக்கூறி நேற்று மாலை சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அவரது உடலை, பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல விடாமல் போராட்டம் நடத்தினர். உறவினர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால், செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முனீஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.