மோகனூர் அருகே பெண்ணிடம் தங்கச்செயினை பறித்து தப்பி ஓடிய வாலிபர் கைது.
மோகனூர் அருகே வளையபட்டி பகுதியில் பெண்ணிடம் 3 ½ பவுன் தங்கச்செயினை பறித்து தப்பி ஓடிய வாலிபர் கைது செய்தனர்.;
பரமத்திவேலூர்,ஜூலை.24: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி( 45). இவரது மகள் பவித்ரா (20). இவர்கள் இருவரும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது சாப்பிடுவதற்காக வலையபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பயணிகள் நிழல் கூடத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறை ராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் வெங்கட்ராமன் (37). என்பவர் அங்கு காரை நிறுத்தி விட்டு வெளியே வந்து சாப்பிட்டு கொண்டிருந்த கோமதி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். இது குறித்து கோமதி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மோகனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி காரை ஒட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் வளையபட்டி பகுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த பெண்ணிடம் தங்க செயினை பறித்து கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டார். அடிப்படையில் வெங்கட்ராமனை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனர்.