தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் !

கோவை நகர மற்றும் புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மருந்தாளுனர்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-07-25 06:58 GMT
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் சார்பில் கோவை நகர மற்றும் புறநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மருந்தாளுனர்கள் இணைந்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகர் மாவட்டத் தலைவர் எஸ். வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் குமரன் வரவேற்புரையையும், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.என். ஆல்ட்ரின் ஜோசப் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையையும் நிகழ்த்தினர். மாநிலச் செயலாளர் பெ. வல்லவன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை நீக்கி நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருந்துகளை உரிய வெப்ப நிலையில் பாதுகாக்க குளிர்பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்குகள் மற்றும் மருந்தகங்களை அமைக்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் மாநில துணைத் தலைவர் ஆர். சிவக்குமார் வாழ்த்து உரையாற்ற, புறநகர் மாவட்ட துணைத் தலைவர் தினகரன் நன்றி கூறினார். கோவை மாவட்டத்திலிருந்து பெருமளவில் மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள் மற்றும் மருந்து கிடங்கு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News