பூதலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றியம் அலுவலகம் (தியாகி என்.வி.நினைவகம்), சிலை திறப்பு விழா
திறப்பு விழா;
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், அய்யனாபுரம் சாலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில், மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் திருவுருவச் சிலை திறப்பு, (என்.வி நினைவகம்) கட்சி அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி வரவேற்றார். சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, தியாகி என்.வி திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். மூத்த தலைவர் டி.கே.ரெங்கராஜன் கட்சிக் கொடியேற்றி வைத்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி அலுவலகத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் தியாகி என்.வி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர். இதில், தமிழர் தேசிய முன்னணி அய்யனாபுரம் முருகேசன், திமுக ஒன்றியச் செயலாளர் அசோக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் குணா, சிபிஎம் மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், ஆர்.சி.பழனிவேலு, தஞ்சாவூர் மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அனைத்துக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பூதலூர் ஒன்றியம் ராயமுண்டான்பட்டி கிராமத்தில், தியாகி என்.வி நினைவிடத்தில் கொடியேற்று நிகழ்ச்சி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ராயமுண்டான்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவிகளுடன் இணைந்து சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மரக்கன்றை நட்டு வைத்தார்.