தஞ்சை, பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் இளைஞனின் உடலை தீயணைப்பு துறை வீரர்கள் வெள்ளிக்கிழமை மீட்டனர். தஞ்சாவூர் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்- ராஜலட்சுமி மகன் குகன். (வயது 17), இவர் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேருவதற்காக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது பெற்றோர்கள் தனது மகன் குகனை காணவில்லை என தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குகனை தேடி வந்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை செக்கடி பெரியகோட்டை அகழியில் இறந்த நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவன் தண்ணீரில் மிதப்பதாக அங்கு இருந்த பொதுமக்கள் தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அகழியில் மிதந்த இளைஞரின் சடலத்தை மீட்டினர். மேலும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த சடலம் தஞ்சை மேலவீதி பகுதியை சேர்ந்த குகன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.