தஞ்சையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்...  பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தல்... 

அரசு ஊழியர் சங்கம்;

Update: 2025-07-27 13:48 GMT
தஞ்சையில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ரமேஷ் வரவேற்று பேசினார். மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை தாக்கல் செய்து மாநில பொதுச்செயலாளர் மு.சீனிவாசன் பேசினார். மாநில பொருளாளர் டேனியல் ஜெயசிங் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில், "தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி   உடனடியாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெரும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் 25 சதவீதம் என்பதை மீண்டும் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் தனியார் மயத்தை கைவிட வேண்டும். அமைச்சுப்பணி நியமனத்தையும், தொகுப்பூதிய முறையில் சுகாதாரத்துறையில் நியமனம் செய்ய வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகம் முன்பு வரும் 08.08.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது"  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அரசு ஊழியர் சங்க கொடியை மாநிலத் தலைவர் பாஸ்கரனும், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன கொடியை மாநில பொதுச் செயலாளர் சீனிவாசனும் ஏற்றி வைத்தனர். இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மகளிர் துணை குழு உறுப்பினர்கள், தோழமை சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News