மக்காச்சோளம் சாகுபடி செய்ய அழைப்பு.
கபிலர்மலை வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய அழைப்பு.;
பரமத்தி வேலூர், ஜூலை 29: பரமத்தி வேலூர் அருகே உள்ள கபிலர்மலை வட்டாரத்துக்கு உள்பட்ட விவசாயிகள் மானிய விலை யில் மக்காச்சோள சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் ராதாமணி கூறியதாவது: குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் கணிசமான லாப மீட்ட மக்காச்சோள சாகுபடி முக்கியமான பயிராகும். மக்காச்சோளப் பயிர் கபிலர்மலை வட்டாரத்தில் பரவலாக சாகுபடி செய்யப் பட்டு வரும் பயிராகவும், குறுகிய காலப்பயிர் என்பதால் பாசனநீர் குறைவாக இருக்கும் வயல்களுக்கு ஏற்ற பயிராகவும் உள்ளது. தமிழக அரசின் வேளாண் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருள்கள் மற்றும் நானோ யூரியா போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையக் கிடங்குகளில், பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 50 ஹெக்டேருக்கும், ஆதிதிராவிடர் பிரிவு விவசாயிகளுக்கு 5 ஹெக்டருக்கும் மானிய விலையில் மக்காச்சோள சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் உட னடியாக வழங்க தயார்நிலையில் உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் கபிலர்மலை வட்டார விவசாயிகள்,கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என்றார்.