தஞ்சாவூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
கிரைம்;
தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இரண்டரை பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே பஞ்சநதிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி கவிதா (29). இவர் தனது அம்மா மற்றும் தங்கைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு வீட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து கவிதா, அவரது அம்மா மற்றும் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கவிதா கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் செயின் பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா திடுக்கிட்டு இருந்து அலறியுள்ளார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தங்கச் செயினுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல்நிலையத்தில் கவிதா புகார் செய்தார். இதன் பேரில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.