பேராவூரணி குமரப்பா பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி 

விழிப்புணர்வு பேரணி;

Update: 2025-07-29 16:34 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா வித்யாலயா பள்ளியில், உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது.  ஆண்டு தோறும் ஜூலை.28 ஆம் தேதி உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குமரப்பா பள்ளியில் நடைபெற்ற விழாவில் இயற்கை பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தொடங்கி வைத்து பேசியதாவது,  "இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28-ஆம் தேதி உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக 1948 ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டது. எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க இச் சங்கம் முயல்கிறது. உலகம் முழுவதும் தாவரம், விலங்கினம் என உயிர்கள் பலவகைப்படுகின்றன. நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசுகளால் நிறைந்திருக்கின்றன மாசற்ற, சுகாதாரமான உலகம்  அமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நீர் வளத்தையும் , நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம்.  இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மனித குலத்தின் கடமையாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இயற்கை வளங்களை பாதுகாப்பது, நமது எதிர்கால சந்ததியினருக்காக நாம் செய்யும் முக்கியமான முதலீடாகும்" என்று பேசினார்.  பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி  புதிய பேருந்து நிலையம், முதன்மைச் சாலை வழியாக ஆவணம் சாலை முக்கம் வரை சென்று திரும்பி  பள்ளியில் நிறைவடைந்தது.  பேரணியில் மாணவர்கள் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி, முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். இப்பேரணியில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆசிரியர்கள் மூர்த்தி, விஜய், ஜெனிஷா, ஆதிகா, ஏஞ்சலின்ஜெனிஷா, சாருமதி, சுவேதா மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

Similar News