உயர்கல்வியை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை: முதல்வருக்கு பாலகுருசாமி வேண்டுகோள்
உயர்கல்வியை சீரமைக்க உடனடி நடவடிக்கை தேவை என முதல்வருக்கு பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
முதல்வர் ஸ்டாலினுக்கு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பாலகுருசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழக பல்கலைக்கழகங்கள் நெருக்கடிமிக்க சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அதற்கு விரைந்து தீர்வு காணாவிட்டால், உயர்கல்வி நிறுவனங்களின் தரம், தன்னாட்சி அந்தஸ்து, உலகளாவிய போட்டித் திறன் அனைத்தும் பாதிக்கப்படும். தமிழக பல்கலைக்கழகங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் புரிதலும், சரியான தெளிவும் இல்லை. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, அதன் இலக்குகளை அடையத்தக்க வகையிலான மாற்று கல்விக் கொள்கையும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இந்த விஷயத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாமல் இருந்தால், அது மாநில பல்கலைக்கழகங்களில் குழப்பத்தை உண்டாக்கும். தமிழ கத்தின் சமூக, பொருளாதார, மொழி சூழலுக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கை இலக்குகளை அடைவதற்கான ஒரு தெளிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசர, அவசியம். தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள், நிரந்தர பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள் இல்லை. சரியான தலைமை இல்லாவிட்டால், பல்கலைக்கழகம் சரியாக செயல்பட முடியாது. பல ஆண்டுகளாக பணி நியமனம் இல்லாததால், ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. தற்காலிக முறையில் நியமித்தால், கற்பித்தல், ஆராய்ச்சி பணி சரியாக இருக்காது. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. அரசு அதிகாரிகளின் அளவுக்கு மீறிய தலையீடு, பல்கலைக்கழக நிர்வாகத்தையும், அதன் தன்னாட்சி அந்தஸ்தையும் பாதிக்கும். இன்றைய கல்வி, வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆராய்ச்சி, காப்புரிமை, சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் தமிழக பல்கலைக்கழகங்கள் பின்தங்கி உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், உயர்கல்வியை சீரமைக்க சில யோசனைகளை முன்வைக்கிறேன். உயர்கல்வியை மதிப்பீடு செய்யவும், சீரமைப்புக்கான செயல் திட்டங்களை பரிந்துரைக்கவும் மாநில உயர்கல்வி சீரமைப்பு செயல் குழுவை அமைக்க வேண்டும். ஆசிரியர் நியமனங்களில் வெளிப்படைத் தன்மை, காலக்கெடுவுடன் கூடிய நியமன முறையை அறிமுகம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நிதியை உயர்த்த வேண்டும். தற்போதைய சூழலுக்கு ஏற்ற பாடத் திட்டங்களை உருவாக்கும் வகையில், பல்கலைக்கழகங்களும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட செய்ய வேண்டும். எனவே, உயர்கல்வி சீரமைப்புக்கு உறுதியாக, தைரியமாக, விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.