அமெரிக்காவில் சிகிச்சை: இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி சகோதரருக்கு ஐகோர்ட் உத்தரவு
அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்கான இந்திய மருத்துவர் அளிக்கும் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவகாசம் கேட்பு: அப்போது, அமலாக்கத்துறை தரப்பில், “விசாரணை அதிகாரி பலமுறை அழைப்பாணை அனுப்பியும், விசாரணைக்கு ஒரு முறை கூட அசோக்குமார் ஆஜராகவில்லை. அவர் அமெரிக்க செல்ல அனுமதிக்க கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்கு இந்திய மருத்துவரின் பரிந்துரையை பெற வேண்டியது அவசியம். அவ்வாறு மருத்துவர் பரிந்துரைத்தது தொடர்பான ஆவணங்களை இதுவரை நீதிமன்றத்தில் அசோக்குமார் ஏன் தாக்கல் செய்யவில்லை” என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக, அசோக் குமார் தரப்பில் பதில் அளிக்ககால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள், அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொள்ள தேவையான இந்திய மருத்துவரின் பரிந்துரை கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அசோக் குமாருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆக.5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.