நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில்“இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம்”விழிப்புணர்வு கருத்தரங்கம்.!
அனைத்து மாணவ மாணவியரும் போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.;
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பாக சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்புக்கான சர்வதேச தினம் (ஜூலை 26), உலக இயற்கை பாதுகாப்பு தினம், உலகக் கல்லீரல் அழற்சி நாள் (ஜூலை 28), சர்வதேச புலிகள் தினம் (ஜூலை 29) மற்றும் சர்வதேச நட்பு தினம் (ஜூலை 30) ஆகியவற்றை முன்னிட்டு, “இயற்கையைப் பாதுகாப்போம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம், நட்பை வளர்ப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு. ராஜேஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார். இக்கருத்தரங்கத்தின் சிறப்பு விருந்தினராக, நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் பங்கேற்று, இவ்வுலக சூழலியல் மண்டலத்தை நிலை நிறுத்துவதில் வனவிலங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன என கூறினார். வனவிலங்குகள் உள்ள பகுதிகளில் மனித நடவடிக்கைகள் குறைக்கப்படும் போது, வன உயிரினங்களின் எண்ணிக்கையும் மேம்பாடு அடையும். புலிகளைப் பொறுத்தவரை, தேசிய அளவில் இதன் எண்ணிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகளின் சீறிய முயற்சிகளால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிகழ்ச்சியின் கருத்தாளராக நாமக்கல் மாவட்ட கல்வி பயிற்சி நிலைய முதல்வர் முனைவர் மு. செல்வம் அவர்கள் கலந்து கொண்டு, “நிலைத்த எதிர்காலத்திற்காக சூழலமைப்புகளை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது,தாங்கள் வசிக்கும் ஊரக மற்றும் நகர்ப்புறச் சுற்றுச்சூழல்களிலும் மரங்களை நட்டு வளர்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்றும், இயற்கையைப் பேணுவது என்பது சமூகப் பொறுப்பாக மாணவர்களால் உணரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கடந்த காலங்களில் நம் முன்னோர்கள் மரங்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றியதின் விளைவாக அவர்களுக்கு ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்தது என்பதை இன்றைய இளம் தலைமுறை நினைவில் கொண்டு, அவற்றைப் பின்பற்றும் செயல்பாடுகளில் தங்களை உறுதியாக ஈடுபடுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தேசிய வைரஸ் ஹெபடைடிஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தொடர்பு அதிகாரி மருத்துவர் மோகனவேல் “போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஹெபடிடிஸ் விழிப்புணர்வு” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் உரையாற்றினார். இதில், மாணவர்கள் விழிப்புடன் செயல்பட்டு, போதைப் பொருட்கள் பயன்பாட்டில் ஈடுபடாமல் இருப்பது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதையும், அதனை தவிர்க்கும் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். மேலும், சுகாதாரமற்ற இடங்களில் உணவு அருந்துவது போன்ற செயல்கள் ஹெபடிடிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்பதையும், இவைகளை தவிர்ப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்பதையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.யூத் ரெட் கிராஸ் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி “யூத் ரெட் கிராஸ் குறிக்கோளாகிய சுகாதாரம், சேவை மற்றும் நட்புறவு” என்பதனை அடிப்படையாகக் கொண்டு மாணவ, மாணவியர்கள் இவ்வுலகில் ஒருவருடன் ஒருவர் நட்புணர்வோடு பழகி, சமூக சேவையில் ஈடுபடுவதால் மனித உறவுகள் வலுப்பெறும் என்றும் கூறினார்.மேலும், இன்றைய உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாமும், ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பெற வேண்டும் என்றும், அதைவிட முக்கியமாக, பிறருக்கு இயன்ற அளவில் முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகள் அளித்து, மனிதநேயத்தை செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இத்தினங்களை முன்னிட்டு, கல்லூரி மாணவ மாணவியர்களுக்காக இயற்கையை பாதுகாப்போம் – நலமுடன் வாழ்வோம், போதை இல்லாத வாழ்வு - கல்லீரல் நலத்திற்கான வழி, புலிகளுக்கும் மனிதனுக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வழிகள், நட்பை செயல் வழியாக காட்டுவோம்: இரத்த தானத்தின் முக்கியத்துவம், ஆகிய தலைப்புகளில் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியின் இறுதியில், அனைத்து மாணவ மாணவியரும் போதைப் பொருள் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஸ் கண்ணன்,இராஜசேகர பாண்டியன், இணைப் பேராசிரியர் மற்றும் விலங்கியல் துறைத் தலைவர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.