தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் மேலும் சிறுத்தை குட்டிகள்
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இருந்த 3 குட்டிகளையும் கவ்வி சென்ற தாய் சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் பதிவானது;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவரது கரும்பு தோட்டத்தில் தொழிலாளர்கள் கரும்பு வெட்டி கொண்டிருந்தபோது பிறந்து 15 நாட்களை ஆன சிறுத்தை குட்டி பிடிப்பட்டது. இதனால் தாய் சிறுத்தை எந்த நேரத்திலும் வரக்கூடும் என்பதால் வனத்துறையினர் சிறுத்தை குட்டியை 3 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணித்து வந்த நிலையில் அன்று நள்ளிரவில் தாய் சிறுத்தை கரும்பு தோட்டத்திற்குள் வந்து தன் குட்டியை வாயில் கவ்வியபடி எடுத்து சென்றது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.இருந்தாலும் சிறுத்தை நடமாட்டம் இருக்கக்கூடும் என்பதால் கரும்பு தொழில் வெட்டும் தொழிலாளர்கள் ஒருவித பயத்துடனே இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கரும்பு காட்டிற்குள் மேலும் 3 சிறுத்தை குட்டிகள் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தொழிலாளர்கள் போட்டது உரிமையாளர் சுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் உடனடியாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை மீட்டு தனித்தனியாக வைத்தனர்.சிறுத்தை குட்டியை விட்டு சென்ற இடத்திற்கு மீண்டும் தாய் சிறுத்தை வரும் என்பதால் இந்த முறை 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, தோட்டத்தில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.இந்நிலையில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் வந்த தாய் சிறுத்தை ஒவ்வொரு சிறுத்தை குட்டியை 15 நிமிடத்திற்கு ஒருமுறை வந்து மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் வாயில் கவ்விய படி எடுத்துச் சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.இதைத்தொடர்ந்து தோட்டத்தில் வேறு எங்கேயாவது சிறுத்தை குட்டி உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தை மீண்டும் வரக்கூடும் என்பதால் தொடர்ந்து கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.