தோட்டத்தில் வேலை செய்த பெண் பாம்பு கடித்து சாவு
பவானி அருகே பரிதாபம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து சாவு போலீசார் விசாரணை;
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள கண்ணாடி பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (45). இவரது மனைவி சுமதி (41). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் சுமதி நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலைக்கு சென்று இருந்தார். அன்றைய தினம் மாலை அவர் தனது கணவருக்கு போன் செய்து தனக்கு கையில் ஏதோ கடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற கணவர் செல்வம், மனைவி சுமதியை பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். விசாரணையில், அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாம்பு கடித்து இறந்து விட்டதாக தெரியவந்தது. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.