வெள்ள நீர் வடிந்ததால் முகாமிலிருந்து வீடுகளுக்கு திரும்பிய பொதுமக்கள்
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள நீர் வடிந்ததால் முகாம்கள் இருந்தவர்கள், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலக்கரை பழைய காவிரி பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.;
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்த கன மழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டியதை அடுத்து மேட்டூர் அணைக்கு வந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கன அடி நீரானது காவிரியில் அப்படியே திறந்து விடப்பட்டதால் காவிரி கரையோர பகுதியான குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பொன்னியம்மாள் சந்து, கலைமகள் வீதி, மணிமேகலைத் தெரு மற்றும் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை நீர் சூழ்ந்ததால் அங்கிருந்த சுமார் 75 குடும்பத்தினரை வருவாய்த் துறையினர் மற்றும் குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள் அரசு பள்ளியிலும் நகராட்சி திருமண மண்டபத்திலும் தங்க வைத்து உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுத்திருந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை இணைக்கும் பாலக்கரை பகுதி பழைய காவிரி பாலமானது வெள்ளத்தால் பாதிக்கக் கூடாது என்பதற்காக, தற்காலிகமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை நீக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து நீர்வரத்து காவிரி ஆற்றில் 40,000 கன அடி வீதம் வந்து கொண்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியதை அடுத்து வெள்ளம் சூழ்ந்து இருந்த பகுதிகளில் உள்ள வீடுகளை ஆய்வு செய்யும் பணிகள் அரசு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர், மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் வெள்ள அபாயம் நீங்கி பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.