பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை உயர்வு
காரியாபட்டி அருகே வடகரை பட்டாசு ஆலையில் கடந்த ஜூன் 11 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்*.;
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பட்டாசு ஆலையில் கடந்த ஜூன் 11 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரியாபட்டி அருகே வடகரை கிராமத்தில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ராஜசந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ள 30 க்கும் மேற்பட்ட அறையில் காரியாபட்டி, கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்த பட்டாசு ஆலை நாக்பூர் லைசென்ஸ் பெற்று இயங்கி வந்தது. இங்கு அணுகுண்டு சீனி வெடி போன்ற பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜுன் 11 அன்று காலையில் இங்கு பட்டாசு ஆலை திறக்கப்பட்டு அங்கு வழக்கம் போல தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் கருப்பையா, சௌண்டம்மாள் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த கணேசன், பேச்சியம்மாள், முருகன் ஆகிய மூவரையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து கணேசன், பேச்சியம்மாள் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு இருந்த முருகன் என்ற பட்டாசு தொழிலாளி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இதே விபத்தில் இவரது மனைவி பேச்சியம்மாள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது