ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவர் - விற்பவர் கூட்டத்தை விரைவில் ஈரோட்டில் நடத்த வலியுறுத்தல்;

Update: 2025-08-01 02:17 GMT
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 வது செயற்குழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பில்டர்ஸ் அசோசியேசன் ஈரோடு மையத் தலைவர் மோகன் வரவேற்றார். ரியல் எஸ்டேட் ஓனர் அசோசியேஷன் தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் முருகானந்தம் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். தொடர்ந்து, கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.அதேபோல நிதி வளர்ச்சி குழு உறுப்பினர்களும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இக்கூட்டத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே வாங்குபவர் - விற்பவர் (Buyer – Seller) கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.இதனை அடுத்த கட்டத்தில் உள்ள நகரங்களிலும் நடத்த வேண்டும் என தொழில், வணிக சங்கங்களில் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டங்கள் ஈரோட்டில் நடைபெற்றன.எனவே, விரைவில் ஈரோட்டில் வாங்குபவர் - விற்பவர் கூட்டத்தை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜி.எஸ்.டி.யால் ஜவுளி மற்றும் விசைத்தறி தொழில்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் ஆண்டுதோறும் முதலீடு பற்றாக்குறை ஏற்பட்டு புதிய மூலதனம் பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மிக அதிக அளவில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறைக்கு, தங்கத்துக்கு விதிக்கப்பட்டிருப்பது போல ஜிஎஸ்டியை 5லிருந்து 3% குறைக்க வேண்டும்.ஈரோடு மாநகராட்சியில் கடந்த 3 மாதங்களாக வணிகம் செய்யும் அனைவரும் தொழில் உரிமம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.ஏற்கனவே தொழில் வரியை மிக உயர்வான சதவீதத்தில் செலுத்தி வரும் நிலையில் மேலும் தொழில் உரிம வரியும் செலுத்த வேண்டும் என்பது வணிகர்கள் மீது புதிய வரிகளை திணிக்கும் வேதனைக்குரிய செயலாகும். எனவே, மாநகராட்சியின் புதிய தொழில் உரிமம் வரி விதிப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதேபோல நிலை கட்டண மற்றும் மின் கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும்.சோலார் கூரை தகடுகள் பதித்த வணிக நிறுவனங்களுக்கு நெட்வொர்க் சார்ஜஸ் முழுவதும் விலக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News